கோலாலம்பூர், நவ. 11- 1பெஸ்தாரிநெட் திட்டத்தின் நடப்பு நிலவரம்
மற்றும் லபுவான் துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள்
இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முக்கிய இடத்தைப் பெறும்.
1பெஸ்தாரிநெட் திட்டம் மற்றும் அந்த திட்டத்திற்கு டெண்டர்
வழங்கப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை
குறித்து கல்வியமைச்சரிடம் லங்காவி உறுப்பினர் டத்தோ முகமது
சுஹைய்மி அப்துல்லா கேள்வியெழுப்புவார் என நாடாளுமன்ற
அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட இன்றைய கூட்ட நிகழ்ச்சி நிரதலில்
கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2026ஆம் ஆண்டுடன் சேவை நிறுத்தப்படவிருக்கும் பழைமை
வாய்ந்த லபுவான் மெர்டேக்காக துறைமுகத்தை தரம் உயர்த்துவது
தொடர்பான சமீபத்திய நிலவரம் மற்றும் லபுவான் ஒருங்கிணைந்த
துறைமுகத்தின் மேம்பாடு குறித்து லபுவான் உறுப்பினர் டத்தோ டாக்டர்
சுஹைய்லி அப்துல் ரஹ்மான் போக்குவரத்து அமைச்சரிடம்
கேள்வியெழுப்புவார்.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவை தொடர்பில் அண்மைய
காலமாக பல புகார்கள் எழுந்து வரும் நிலையில் இவ்விவகாரத்திற்கு
தீர்வு காண்ப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து
ஜெலுத்தோங் தொகுதி உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் போக்குவரத்து
அமைச்சரிடம் வினா தொடுப்பார்.
இதனிடையே, மலேசியாவில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவின்
பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் நன்னெறி கோட்பாடு மற்றும்
தனியுரிமை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்து வரும்
முயற்சிகள் குறித்து ரொம்பின் தொகுதி உறுப்பினர் டத்தோ அப்துல்
காலிப் அப்துல்லா இலக்கவியல் அமைச்சரிடம் கேள்வி எழுப்புவார்.