NATIONAL

தாயின் தோழியால் துன்புறுத்தப்பட்டதாக சந்தேகம் – நான்கு வயது சிறுவன் காயம்

கோலாலம்பூர், நவ 12 – தற்காலிக பராமரிப்பாளர் பணியை மேற்கொண்டிருந்த தாயின் தோழியால் துன்புறுத்தப்பட்டதாக   சந்தேகிக்கப்படும் நான்கு வயது சிறுவன் காயங்களுக்குள்ளானான். இச்சம்பவம் பெட்டாலிங் ஜெயா,  தாமான் டேசா ரியாவில் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் அச்சிறுவனுக்கு கண், கை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டதாகப்  பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஷாருல்நிஜாம் ஜாபர் கூறினார்.

பாதிக்கப்பட்ட அந்த சிறுவனின் தாயார் போதைப்பொருள் குற்றத்திற்காக கடந்த  செப்டம்பர் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நவம்பர் 6 ஆம் தேதி அவரது கணவர் ஜாமீனில் எடுத்த நிலையில் இடைப்பட்ட காலத்தில்  அச்சிறுவனை அவரின் தோழி பராமரித்து வந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் சொன்னார்.

அச்சிறுவனை திரும்ப அழைத்துச் செல்ல வந்த போது அவனது  உடலில்  காயம் இருப்பதை பெற்றோர் கண்டனர். பட்டாசு வெடித்ததால் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டதாக தற்காலிக காப்பாளர் காரணம் கூறினார் என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் கடந்த  நவம்பர் 8 ஆம் தேதி சிகிச்சைக்காக கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்  நவம்பர் 9 ஆம் தேதி மருத்துவரால் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின்  (சட்டம் 611)  31 (1) (ஏ) பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஷாருல்நிஜாம் கூறினார்.

வழக்கு தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையக நடவடிக்கை அறையை 03-79662222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஆர். தாமோதரன் நாயுடுவை 019-6551269 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :