NATIONAL

இஸ்ரேலை ஐ.நா.விலிருந்து நீக்க அனைத்துலக சமூக ஒன்றுபட வேண்டும் – அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர், நவ. 12- இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து
(ஐ.நா.) இடை நீக்கம் செய்ய அல்லது அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத்
தடைகளை விதிக்க அனைத்துலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

சவூதி அரேபியாவின் ரியாட்டில் நேற்று நடைபெற்ற இஸ்லாமிய
நாடுகளின் சிறப்பு உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய போது அவர்
இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக படுகொலைகளை நிகழ்த்துவதன் மூலம்
இஸ்ரேல் சுய சிந்தனையையும் மனிதாபிமான உணர்வையும் இழந்து
விட்டதாக அவர் கூறினார்.

ஒரு தேசத்திற்கு எதிராக ஸியோனிசி ஆட்சியினர் தொடர்ந்து நடத்தி
வரும் வன்முறைகள், பொருளாதாரத் தடை, ஐ.நா.விலிருந்து இடைநீக்கம்
அல்லது வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இஸ்ரேலுக்கு
எதிராக எடுக்க க் கோரும் கட்டாயத்தை அனைத்துலக சமூகத்திற்கு
ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு எதிராக ஆயுத தடை கொண்டு வரப்பட வேண்டும் என்று
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. பொதுப் பேரவையில்
மலேசியா வலியுறுத்தியதைப் போல் அனைத்துலக சமூக விரைவான
மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்
வலியுறுத்தினார்.

நாகரீக நாடுகளைக் கொண்ட சமூகத்தில் இடம் பெறும் அருகதை
இஸ்ரேலுக்கு கிடையாது. மத்திய கிழக்கை மட்டுமின்றி உலக முறையை
பாதுகாப்பதற்கு ஏதுவாக அந்நாட்டின் தன்மூப்பான செயல்களுக்கு
முடிவுகட்ட வேண்டும் என்றார் அவர்.

ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான உதவி மற்றும் பணி முகமையை
குறி வைப்பதன் மூலம் அனைத்துலக சமூகத்திற்கும் பாலஸ்தீனத்திற்கும்
இடையே உயிர்நாடியாக விளங்கும் தொடர்பை இஸ்ரேல் துண்டிக்கிறது
என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இஸ்ரேலின் தொடர் படுகொலைகளை நாம் உடனடியாக தடுத்து நிறுத்தும்
வேளையில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான உதவி மற்றும் பணி
முகமையை பாதுகாக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :