ஷா ஆலம், நவ. 12- பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பெர்சியாரான சூரியன்
டாமன்சாரா- தாமான் பெலாங்கி டாமன்சாரா அருகே இன்று காலை
ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஐந்து வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை 9.05 மணியளவில் தங்களுக்கு
தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ்
மொக்தார் கூறினார்.
அந்த பகுதியிலுள்ள சாலையில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு வெள்ளம்
ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.
வெள்ளம் காரணமாக சம்பவ இடத்தில் ஐந்து வாகனங்கள் சிக்கிக்
கொண்டதாகவும், இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும்
சம்பவ இடத்திலிருந்த நடவடிக்கை கமாண்டர் தெரிவித்ததாக முக்லிஸ்
சொன்னார்.
எனினும், அப்பகுதியில் வெள்ள நீர் வடியத்தை தொடங்கியதைத்
தொடர்ந்து வாகனப் போக்குவரத்து சீரடையத் தொடங்கியுள்ளது என அவர்
குறிப்பிட்டார்.
வடகிழக்கு பருவமழை இம்மாதம் தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம்
வரை நீடிக்கும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
தொடர்ச்சியான அடை மழையுடன் கடல் பெருக்கும் ஏக காலத்தில்
ஏற்படும் பட்சத்தில் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்படும் என
அத்துறை கணித்துள்ளது.