ஷா ஆலம், நவ. 12 – தென் கொரியாவின் முன்னணி எஃகு தயாரிப்பு
நிறுவனம் சிலாங்கூரில் 44 கோடி வெள்ளியை முதலீடு செய்துள்ளதாக
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
கடந்த 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போஹாங் அயர்ன் அண்ட்
ஸ்டீல் கம்பெனி (போஸ்கோ) எனும் அந்த நிறுவனம் ரவாங் மற்றும்
கோலக் கிள்ளானில் இரு தொழிற்சாலைகளை திறந்துள்ளதாக அவர்
தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
தரமான தயாரிப்புக்கும் அதிநவீன தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்ற
உலகின் பெரிய எஃகு உற்பத்தியாளராக போஸ்கோ விளங்குகிறது என்று
அவர் குறிப்பிட்டார்.
தென் கொரியாவின் காங்னமிலுள்ள போஸ்கோ நிறுவனத்தின்
தலைமையகத்திற்கு வருகை மேற்கொண்ட சிலாங்கூர் ராஜா மூடா
தெங்கு அமீர் ஷாவின் பயணக்குழுவில் நஜ்வான் இடம் பெற்றிருந்தார்.
எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி பெசார் கழகத்தின் தலைமைச் செயல்முறை
அதிகாரி சைபோல்யாஸான் எம்.யூசுப் மற்றும் இன்வெஸ்ட் சிலாங்கூர்
தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸ்ஹாரி இட்ரிஸ்
ஆகியோரும் இப்பயணத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
சிலாங்கூருக்கும் போஸ்கோவுக்கும் இடையே ஒத்துழைப்பும் பரஸ்பர
நலன்களும் மேம்படுவதற்கு இந்த வருகை உதவி புரியும் என்று ராஜா
மூடா நம்பிக்கைத் தெரிவித்தார்.
எஃகு தயாரிப்பில் மட்டுமின்றி மின் உற்பத்தி, ஹைட்ரோஜன்,
வாகனங்கள், மின்னியல், மின்சார மற்றும் கட்டுமானத் துறையுடன்
தொடர்புடைய பொருள்களையும் அந்நிறுவனம் தயாரிக்கிறது.