NATIONAL

திடீர் வெள்ளம் காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஷா ஆலம், நவ. 12 – இன்று காலை இடியுடன் கூடிய கன மழையின் காரணமாக
கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பெருநகரின் பல இடங்களில் மோசமான போக்குவரத்து நெரிசல் உண்டானது.

கடும் மழைக்கான சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு விழிப்புடன்
இருக்கும்படி பொது மக்களை குறிப்பாக வெள்ளம் ஏற்படும் இடங்களில்
வசிப்பவர்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசலைச் சித்தரிக்கும் செய்திகள்
மற்றும் படங்கள் சமூக ஊடகங்களில் குவிந்த வண்ணம் உள்ளன.

டாமன்சாரா-பூச்சோங் நெடுஞ்சாலையின் (எல்டிபி) 4.9வது கிலோ மீட்டரில்
முத்தியாரா டாமன்சாரா அருகே ஒரு அடி வெள்ளத்தில் சாலை
மூழ்கியதால் பெர்சியாரான சூரியனில் கடும் போக்குவரத்து நெரில்
ஏற்பட்டுள்ளதாக ஆஸ்ட்ரோ ரேடியோ டிராபிக் எனது எக்ஸ் தளத்தில்
செய்தி வெளியிட்டுள்ளது.

பெர்சியாரான சூரியனில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஐந்து
வாகனங்களைச் சித்தரிக்கும் காணொளியை தேசிய செய்தி நிறுவனமான
பெர்னாமா வெளியிட்டது.

திடீர் வெள்ளம் காரணமாக எல்டிபி நெடுஞ்சாலையில் கடுமையான
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனமோட்டிகள் கவனப்
போக்கை கடைபிடிக்கும்படி மலேசிய நெடுஞ்சாலை வாரியம் கேட்டுக்
கொண்டது.

கடும் மழை காரணமாக இதர பல இடங்களிலும் வெள்ளம்
ஏற்பட்டுள்ளதாக ஆஸ்ட்ரோ ரேடியோ டிராபிக் கூறியது. கோல
சிலாங்கூர் சாலையில் அமான் புத்ரியிலிருந்து கெப்போங் செல்லும்

சாலையில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக ஒன்றரை மணி நேர பயண
தாமதம் ஏற்பட்டதாக அது குறிப்பிட்டது.

மேலும் பத்து கேவ்ஸ் முதல் ஸ்ரீ டாமன்சாரா வரையிலும் போக்குவரத்து
நெரிசல் காணப்படுகிறது.

இதனிடையே, தங்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் நிலை குறித்து
மிகுந்த விழிப்புடன் இருக்கும்படி பொது மக்களை ஷா ஆலம் மாநகர்
மன்றம் கேட்டுக் கொண்டது.


Pengarang :