ஷா ஆலம், நவ. 12 – அடுத்தாண்டு மத்தியில் அமல்படுத்தப்படவிருக்கும்
ரோன்95 பெட்ரோலுக்கான மானிய செயல்முறை மக்களுக்குச்
சுமையளிக்கும் வகையில் இல்லாதிருப்பதை உறுதி செய்யும் கடப்பாட்டை
அரசாங்கம் கொண்டுள்ளது.
தகுதி நிர்ணய முறையை தமது அமைச்சு உருவாக்கி வரும் வேளையில்
இரு கட்ட விலை நிர்ணய முறையை நிதியமைச்சு தயாரித்து வருவதாக
பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கூறினார்.
இந்த திட்டத்தின் அமலாக்க காலக்கட்டமான அடுத்தாண்டு மத்திய
காலவாக்கில் இதற்கான நிபந்தனைகள் மற்றும் செயல்முறைகள்
அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தகுதி நிர்ணயத்திற்காக செலவின வரம்பு, மதிப்பு மற்றும் குடும்ப
உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இயல்பான
வாழ்க்கைக்கான அடிப்படைச் செலவின முறையை பொருளாதார
அமைச்சும் மலேசிய புள்ளிவிபரத் துறையும் அறிமுகப்படுத்தியுள்ளதாக
அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோல் நிலையங்களில் இலக்கு மானியத் திட்டத்தை அமலாக்குவதில்
அடையாள கார்டு அல்லது இ-வாலட் மூலம் குடும்பத்தின் சமூக
பொருளாதார நிலை கருத்தில் கொள்ளப்படும் என்றார் அவர்.
மக்களவையில் இன்று அமைச்சர்கள் கேள்வி நேரத்தின் போது பூலாய்
தொகுதி உறுப்பினர் சுஹைசான் கையாட் எழுப்பிய கேள்விக்கு
பதிலளிக்கையில் ரபிஸி இதனைத் தெரிவித்தார்.
இந்த இரண்டு கட்ட திட்டமானது 85 விழுக்காட்டு மக்களுக்கு
நிர்ணயிக்கப்பட்ட மானிய விலையையும் அதிக வருமானம் பெறும் 15
விழுக்காட்டினருக்கு சந்தைக்கேற்ற விலையையும் கொண்டிருக்கும் என்
அவர் முன்னதாக தெளிவுபடுத்தியிருந்தார்.
மானிய விலை பெட்ரோலைப் பெறுவதற்கான தகுதியை உறுதி
செய்வதற்கு அடையாளக் கார்டை பயன்படுத்தும் செயல்முறை பல்வேறு
சவால்களுக்கு வழி வகுக்கும் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது
என்றும் அவர் சொன்னார்.
புறநகர்களில் காணப்படும் மந்தமான இணையச் சேவை வசதி,
அடையாளக் கார்டுகளில் உள்ள மின் சில்லுகளில் ஏற்படும் பழுது,
அடையாளம் காண்பதில் ஏற்படும் சிக்கல் மற்றும் அடையாள கார்டை
தவறாகப் பயன்படுத்துவது ஆகியவை அந்த சவால்களில் அடங்கும்
என்றார் அவர்.