பத்துமலை நவ 12 ; – கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்துமலை இந்தியக் குடியிருப்பு சங்கத்துக்கு எதிராக ஒரு ஆட்சேபனை கூட்டத்தை நடத்தி 13 ஆண்டுகளுக்கு முன் பத்துமலை இந்தியர்கள் குடியிருப்பில் பெரும்பாலோர் எடுத்த முடிவை இன்று ஒரு விவகாரமாக்கி சுமார் 121 இந்திய குடும்பங்களை இன்னும் எத்தனை ஆண்டுகள் வேதனை படுத்த அந்த மறியல் கும்பல் திட்டமிட்டுள்ளது எனக் கேட்டார் அந்தப் பகுதி இந்திய சமூகத் தலைவர் வீரையா அப்பு.
இந்த கிராமக் குடியிருப்பைச் சுற்றி பல அடுக்குமாடி குடியிருப்புகளை முந்தைய மாநில அரசும் அன்றைய சட்டமன்ற உறுப்பினர்களும் மேற்கொண்டனர். அந்த மேம்பாடுகளில் இந்த இந்தியக் குடியிருப்பு முற்றாக அழிந்து விடக்கூடாது என்று அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவின் படி, இந்த இந்தியக் கிராமத்துக்கு முறையான சாலை கால்வாய்கள் அமைப்புகளுடன் ஒரு மறு மலர்ச்சி அளிக்கும் நோக்கத்தில், கூட்டாக எடுத்த திட்டத்தின் படி, இந்த இடத்தை விட்டு தற்காலிகமாக வெளியேற ஒப்புக்கொண்டு அதற்கான சத்தியப் பிரமாணத்தை 2009 ம் ஆண்டே அனைவரும் வழங்கி விட்டோம்.
நில உரிமத்தைத் திரும்ப ஒப்படைத்த அனைவருக்கும், மறுசீரமைக்கப்பட்ட பத்து மலை இந்தியர் குடியிருப்பில் 121 நில வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டு அதற்கான, போராங் 5A எனப்படும் நில உரிமை கடிதம் கிடைத்துள்ளது. அதைச் செயல்படுத்தாமல் இன்னும் எத்தனை ஆண்டுகளை நாம் காலம் கடத்த வேண்டும்.?
இப்பொழுது இக் குடியிருப்புக்கு அப்பாற்பட்டவர்கள், இந்த நிலம் எந்த மேம்பாடும் அடையாமல் நில உரிமம் வைத்துள்ளவர்களை ஏன் துன்பப்படுத்த வேண்டும்? எவருக்கும் எந்த நன்மையும் கிடைக்காமல் செய்வதில் அவர்களுக்கு என்ன லாபம்? எனக்கேட்டார்
அந்த மறியல் தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், இங்கே, ரகசியமான முறையில் வெளி ஆட்களுக்கு நிலபட்டா கொடுக்கப் பட்டுள்ளது என்கிறார்கள். அப்படி நில உரிமம் பெற்றவர்கள் மீது நில அலுவலகத்திடம், போலீசிடம் அல்லது ஊழல் ஒழிப்பு துறையிடம் ஏன் புகார் அளிக்கவில்லை? எதற்கு வீதி ஆர்ப்பாட்டம்?
காட்டுப் பகுதிக்கு தள்ளப்பட்டதாக கூறுபவர்கள், பட்டணத்தில் ஒரு வீடு வாங்குவதும், பத்து ஆராங்கில் சொந்த நிலத்தில் குடியேறுவதும் அவர்களின் விருப்பம். அதற்கான எந்த ஏற்பாட்டையும் பத்துமலை இந்தியக் குடியிருப்பாளர் சங்கம் செய்ய வில்லை. அப்படியிருக்க பத்துமலை இந்தியக் குடியிருப்பாளர் சங்கத்தை ஏன் சாட வேண்டும் ? என இந்தியச் சமூகத் தலைவர் திரு. அப்பு என்ற வீரையா கேட்டார்.
அவர்களின் நோக்கம் மந்திரி புசார் அமிருடினையும் , பத்துமலை இந்தியர் குடியிருப்பாளர்கள் சங்கத்தையும் அவமானப்படுத்துவதும், சாடுவதுமே ! மற்றவர்களைக் குறை சொல்லும் போக்கை கைவிடுவது நம் சமுதாயத்திற்கு நல்லது. என்றார் அவர்.