கோலாலம்பூர், டிச. 2- சொந்த வீடு உள்பட ஐந்து வீடுகள்
தீக்கிரையாவதற்கு காரணமான ஆடவர் ஒருவரை போலீசார் கைது
செய்துள்ளனர். இச்சம்பவம் சுங்கை பூலோ, குவாங் மலிவு விலை
வீடமைப்புப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7.06 மணிக்கு நிகழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்ப பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்ததைத்
தொடர்ந்து 34 வயதுடைய அச்சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக
சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது
ஹாபிஸ் முகமது நோர் கூறினார்.
அவ்வாடவர் சொந்த வீட்டிற்கு தீ வைத்தது தொடக்கக் கட்ட
விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் தீ அருகிலுள்ள நான்கு
வீடுகளுக்கும் பரவியது என்று அவர் சொன்னார்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிருடற் சேதம் ஏற்படவில்லை எனக்
கூறிய அவர், இந்த இதன் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 435வது
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர்
குறிப்பிட்டார்.
அவ்வாடவர் இச்செயலைப் புரிந்ததற்கான காரணம் ஆராயப்பட்டு
வருவதாகக் கூறிய அவர், கைதான ஆடவர் விசாரணைக்காக வரும் டிசம்பர் 4ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றார்.
இதனிடையே, இந்த தீச்சம்பவத்தில் மூன்று வீடுகள் முற்றாக அழிந்த
வேளையில் மேலும் இரு வீடுகளுக்கு ஐந்து விழுக்காடு சேதம்
ஏற்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார்
கூறினார்.