புத்ராஜெயா, டிச. 11 – கெஅடிலான் ராக்யாட் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதற்காக அக்கட்சிக்கு 1 கோடி வெள்ளியை அல்லாமல் 100,000 வெள்ளியை மட்டுமே வழங்குமாறு அதன் முன்னாள் உதவித் தலைவரான டத்தோ ஜுரைடா கமாருடினுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
எனினும், கெஅடிலான் கட்சியுடன் செய்து கொண்ட பத்திர ஒப்பந்தத்தை ஜுரைடா மீறிவிட்டார் என்ற உயர்நீதிமன்றத்தின் முடிவை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் டத்தோ சீ மீ சுன், டத்தோ அஸ்மான் அப்துல்லா மற்றும் டத்தோ அஹ்மட் கமால் எம்.டி ஷாஹித் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒருமனதாக உறுதி செய்தது.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தால் ஜுரைடாவுக்கு விதிக்கப்பட்ட 1 கோடி வெள்ளி இழப்பீடு நியாயமற்றது என்று நீதிபதி சீ தனது தீர்ப்பில் கூறினார்.
முன்னாள் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான ஜுரைடாவுக்கு எதிரான வழக்கில் கடந்த 2023 ஜூன் 23ஆம் தேதி கெடிலானுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அக்தார் தாஹிர், அக்கட்சிக்கு 1 கோடி வெள்ளியை வழங்க அவருக்கு உத்தரவிட்டார்.
அந்த ஒப்பந்தப் பத்திரம் செல்லுபடியாகும் என்பதோடு அது பிணைக்கப்பட்ட ஒப்பந்தம் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
கடசியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் பத்திரத்தை மீறியதற்காக ஒரு கோடி வெள்ளி இழப்பீடு கோரி கடசியின் சார்பில் அதன் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்யியோன் 2020 செப்டம்பர் 28ஆம் தேதி வழக்குத் தாக்கல் செய்தார்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளபடி, கட்சிக்கு 1 கோடி வெள்ளியைச் செலுத்துவதாக ஜுரைடா அந்த பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்ததாக சைபுடின் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
கெஅடிலான் கடசி சார்பில் போட்டியிட்டு வென்றப் பின்னர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தாலோ, மற்ற அரசியல் கட்சிகளில் சேர்ந்தாலோ அல்லது சுயேச்சையாக பிரகடனப்படுத்திக் கொண்டாலோ ஏழு நாட்களில் கட்சிக்கு 1 கோடி வெள்ளியைச் செலுத்த ஜுரைடா ஒப்புக்கொண்டதாக அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
எனிறும், அம்பாங் தொகுதியை காலி செய்யாமல் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக 10 கெடிலான் எம்.பி.க்களுடன் கடந்த 2020 பிப்ரவரி 24 அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜுரைடா, இறுதியில் பெரிக்கத்தான நேஷனல் என்று அழைக்கப்படும் ஒரு கூட்டணியை உருவாக்கினார்.