MEDIA STATEMENTSELANGOR

2024 இலக்கைத் தாண்டியது சிலாங்கூர் மாநிலத்தின் வருமானம்- வெ.259.3 கோடியை எட்டியது

கிள்ளான், டிச. 11 –  கடந்த திங்கள்கிழமை வரை சிலாங்கூர் மாநிலத்தின் வருமானம் 259 கோடியே 30 லட்சம் வெள்ளியை எட்டியது. இவ்வாண்டிற்கான  இலக்கான 220 கோடி வெள்ளியை விட இது 18 விழுக்காடு அதிகமாகும்.

வருவாயை அதிகரிப்பதிலும் மாநிலத்தின் பொருளாதாரத்தை இயக்குவதிலும் மாநில அரசின்  சிவில் மற்றும் நிர்வாகப் பணியாளர்களின் வெற்றிக்கு இது சான்றாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த சாதனை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. அதே போல் மாநில வளங்களை  திறம்படவும்  இலக்கு முறையிலும் செலவிடும் மாநில நிர்வாகத்தின் மக்கள்  கொண்டுள்ள நம்பிக்கையின் எடுத்துக் காட்டாகவும் இது விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் ஆட்சியின் கீழ் சிலாங்கூரின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பதைச் சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்தாண்டு தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூரின் பங்களிப்பு 25.9 விழுக்காடாக  அதிகரித்தது.

இது  40,000 கோடி வெள்ளிக்கும் அதிகமாக  அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டில் 40, 610 கோடி வெள்ளி வருடாந்திர பொருளாதார மதிப்பை பதிவு செய்யும் மலேசியாவின் முதல் மாநிலமாக சிலாங்கூரை உருவாக்கியது என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள இஸ்தானா ஆலம் ஷாவில் இன்று நடைபெற்ற மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின்  அல்ஹாஜின் 79வது அதிகாரப்பூர்வ  பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் ஆற்றிய உரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சைபர்ஜெயாவில் கட்டப்படும் இரண்டாவது ஒருங்கிணைந்த சுற்று வடிவமைப்பு பூங்கா, பொருளாதார மதிப்பை வளர்ப்பதையும்  இளைஞர்களுக்கு அதிக சம்பளம் பெறும் வேலைகளை உருவாக்குவதற்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது  என்று அமிருடின்  கூறினார்.


Pengarang :