அதே சமயம், பேராக் மற்றும் ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை.
திரங்கானுவில் நேற்றிரவு நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடி இருந்த 1,273 குடும்பங்களைச் சேர்ந்த 5,198 பேருடன் ஒப்பிடுகையில் இன்று காலை 1,449 குடும்பங்களைச் சேர்ந்த 5,853 பேராக அதிகரித்துள்ளதாக திரெங்கானு மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்தது.
பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மாரான் மாவட்டத்திற்கு அடுத்து வெள்ளத்தில் பாதிக்கப் பட்டுள்ள சமீபத்திய மாவட்டமாக ஜெராண்டுட் மாறியுள்ளது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி இங்கு 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 160 பேராக இருந்தது.
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.09 மணி நிலவரப்படி 72 குடும்பங்களைச் சேர்ந்த 307 பேராக உயர்ந்துள்ளது. நேற்றிரவு 71 குடும்பங்களைச் சேர்ந்த 288 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில், ஜோகூர் மாநிலத்தில் சிகாமாட் ( 26 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர்) மற்றும் தங்காக் (15 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் ) ஆகிய இரண்டு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதாக ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
பேராக் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய பேராக்கின் கம்போங் தெலுக் கெப்பாயாங்கில் உள்ள நிவாரண மையத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைச் செயலகம் தெரிவித்துள்ளது.