NATIONAL

நீரோட்டத்தில் சிக்கிய நால்வரை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்

ஈப்போ, டிச. 12- சித்தியவான்,   ராஜா பெர்மைசூரி பைனுன்  பாலத்தின் கீழ் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென  ஏற்பட்ட வலுவான நீரோட்டத்தில் சிக்கிய நால்வரை  தீயணைப்பு வீரர்கள்  இன்று அதிகாலை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அதிகாலை 1.13 மணிக்கு  தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பேராக் மாநில  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர்  சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.

இரு ஆடவர்கள்  மற்றும்  இரு பெண்கள் அடங்கிய அந்த நால்வரும்  மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது பாலத்தின் கீழ் சிக்கிக் கொண்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது அங்கு நீர்மட்டம் முழங்கால் அளவுக்கு உயர்ந்து காணப்பட்டதோடு நீரோட்டமும் வேகமாக இருப்பது தெரியவந்தது.

சம்பவ இடத்திலிருந்த சித்தியவான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்  அருகிலுள்ள படகுத் துறையிலிருந்து   படகைக் கீழே இறக்கி மீட்பு பணிகளை மேற்கொண்டனர் அவர் கூறினார்.

மீட்கப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காக  போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றார் அவர்.


Pengarang :