பெட்டாலிங் ஜெயா, டிச. 13- இங்குள்ள கம்போங் செம்பாக்கா பகுதியில் கடந்த 2021 முதல் நிலவி வரும் திடீர் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக சுங்கை காயு ஆரா ஆற்றை தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொள்ள மாநில அரசு 60 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 0.4 ஹெக்டர் பரப்பளவில் நீர்ப்பிடிப்பு குளம், தடுப்புச் சுவர், ஒரு மீட்டர் உயர மலைச்சாரல் தடுப்பு நிர்மாணிப்பு ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
இந்த திட்டங்கள் கடந்த நவம்பர் 8ஆம் தேதி முற்றுப் பெற்றதாகக் கூறிய அவர், ஆற்றில் மண் அரிப்பைத் தடுத்து கரைகளை வலுப்படுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது என்றார். இங்கு நிர்மாணிக்கப்பட்ட வெள்ள நீர் சேகரிப்பு குளம் 48,000 கன மீட்டர் நீரை சேகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது என்றார் அவர்.
இப்பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு மோசமான வெள்ளம் ஏற்பட்டது. ஐந்து அல்லது ஆறு அடி அளவுக்கு உயர்ந்த வெள்ளம் காரணமாக கம்போங் செம்பாக்காவைச் சேர்ந்த 90 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
இது தவிர பிஜேயு ¼ முதல் ஜாலான் இமாஸ் 1 பகுதி உள்ளிட்ட இடங்களில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை அமல்படுத்துவதற்கான கடப்பாட்டையும் மாநில அரசு கொண்டுள்ளது என்று பண்டார் உத்தாமா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இதனிடையே, பிஜேயு 1/4 முதல் ஜாலான் இமாஸ் வரையிலான பகுதியில் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்புத் திட்டம் இதுவரை 10 விழுக்காடு பூர்த்தி அடைந்துள்ளது பெட்டாலிங் மாவட்ட வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையின் (ஜே.பி.எஸ்.) பொறியாளர் இஞ்சினியர் முகமது ஷாரில் முகமது கூறினார்.