NATIONAL

சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் இன, அரசியல் விவகாரங்களை கலக்கக்கூடாது- அமைச்சர் வலியுறுத்து

புத்ராஜெயா, டிச. 13- நாட்டில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும்  அரசாங்கத்தின்   முயற்சிகளில் இன மற்றும் அரசியல் விவகாரங்களை கலக்கக்கூடாது என்று  சுற்றுலா, கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங்  கிங் சிங் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதில் சுற்றுலா துறை  அமைச்சு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனினும், இந்த முயற்சிகள்  குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது. அரசாங்கம் சீன சுற்றுப் பயணிகளுக்கு  முக்கியத்துவம் அளிப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர் என அவர் சொன்னார்.

சுற்றுலா ஊக்குவிப்பு குறித்து, குறிப்பாக சீன சுற்றுப் பயணிகளுக்கு  எதிராக சில தரப்பினர் அரசியல்  மற்றும் இன விவகாரங்களை எழுப்பி  வருவது குறித்து கவலை தெரிவித்த அவர், பொருளாதார வளர்ச்சிக்கு  உத்வேகம் அளிக்கும்  அரசாங்கத்தின் முயற்சியை இச்செயல் மந்தமாக்கும்  என்றார்.

அரசியல் மற்றும் சமய தலையீட்டை  தவிர்க்க சுற்றுலா அமைச்சு  முயன்று வருகிறது. மாறாக, மலேசியர்களுக்கு  வர்த்தக வாய்ப்புகளை  உருவாக்குவதிலும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதிலும் அது  கவனம் செலுத்துகிறது என்றார் அவர்.

சுற்றுப் பயணிகளை ஈர்ப்பதற்கு ஏதுவாக நாம் அனைவரும் ஒன்று  பட்டு செயல்பட அழைக்கிறேன். சீன நாட்டு சுற்றுப் பயணிகளை  ஈர்ப்பதில் மலேசியா மட்டும் கவனம் செலுத்தவில்லை. சவூதி அரேபியாவும்  ஆர்வம் காட்டி வருகிறது. கணிசமான அளவு செலவிடும் ஆற்றல்  கொண்ட பெரிய சந்தையாக சீனாவை அது பார்க்கிறது என்று அவர் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சீன நாட்டு சுற்றுப் பயணிகளின் வருகை நாட்டின் பொருளாதாரத்திற்கு  கணிசமான அளவு பங்களிப்பை வழங்கும் என்பதோடு புறநகர்ப்  பகுதிகளில் உள்ள சிறு வணிகர்களுக்கும் பலனைத் தரும் என்று அவர்  சொன்னார்.

சுற்றுப் பயணிகளுக்கு கூடுதல் கவர்ச்சிகரமான இடமாக விளங்கும்  தாய்லாந்து போன்றநாடுகளுடன் நாம் போட்டியிட வேண்டுமானால்  சுற்றுப்பயணிகளின் விருப்பத் தேர்வாக மலேசியாவை நாம் மேம்படுத்த வேண்டும்.  அதைவிடுத்து சுற்றுப்பயணிகளை குறிப்பாக சீனாவிலிருந்து  வருவோரை  செய்யக் கூடாது என்றார் அவர்.


Pengarang :