கெய்ரோ, டிச. 13- காஸாவின் மத்திய பகுதியிலுள்ள தபால் நிலையத்தில் அடைக்கலம் நாடியவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 50 பேர் காயமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்த பிராந்தியம் மீது இஸ்ரேலியப் படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 66 ஆகப் பதிவாகியுள்ளது.
பதினான்கு மாதங்களாக நீடித்து வரும் பேர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படாத நிலையில் நுசேய்ராட் முகாமில் உள்ள தபால் நிலையத்தில் அடைக்கலம் நாடியிருந்தவர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அருலுள்ள பல வீடுகளும் சேதமடைந்ததாக மருத்துவப் பணியாளர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
இந்த தாக்குதல் தொடர்பில் கருத்து பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிக்கு இஸ்ரேல் உடனடியாக பதிலளிக்கவில்லை.
தென் காஸா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 13 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும் மனிதாபிமான உதவிப் பொருள்களை ஏற்றி வந்த டிரக்குகளுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த படையினரில் ஒரு பகுதியினர் என்று மருத்துவ மற்றும் ஹமாஸ் வட்டாரங்கள் கூறின.
எனினும், அவர்கள் அந்த உதவிப் பொருள்களை கடத்திச் செல்ல வந்த தீவிரவாதிகள் என்று இஸ்ரேலிய இராணுவம் கூறியது. ராஃபா மற்றும் கான் யுனிஸ் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களில் பலியானோரில் பலர் ஹமாஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற அந்த அமைப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
மனிதாபிமான பொருள்களின் விநியோகம் முறையாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய இரு வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறிய இஸ்ரேலிய இராணுவம், உதவி தேவைப்படும் காஸா மக்களுக்கு அந்த உதவிப் பொருள்கள் செல்வதை தடுக்க ஹமாஸ் உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்ததாக குற்றஞ்சாட்டியது.