கிள்ளான், டிச. 13 – உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு மேற்கொண்ட ஓப் திரிஸ் 3.0 நடவடிக்கையில் டீசல் மோசடிக் கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டதோடு 50,000 லிட்டர் மானிய விலை டீசலும் பறிமுதல் செய்யப்பட்டது.
இரண்டு மாத உளவு நடவடிக்கைக்குப் பின்னர் அமைச்சின் சிலாங்கூர் மாநில அமலாக்க அதிகாரிகள் சிலாங்கூர் காவல்துறை தலைமையகத்துடன் இணைந்து நேற்று அதிகாலை 3.00 மணியளவில் போர்ட் கிள்ளானில் உள்ள படகுத் துறையில் சோதனை நடத்தினர்.
இழுவைப் படகுகள் நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தப்படும் அந்த படகுத் துறையில் இழுவை படகு ஒன்று நங்கூரமிடப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடம் கூறினார்.
மேலும் சோதனை செய்ததில் இழுவை படகின் டாங்கி மற்றும் குழாய் இணைப்பைக் கொண்டிருந்த சேமிப்பு டாங்கியில் டீசலும் இருந்தது தெரியவந்தது. இழுவைப் படகில் இருந்து சேமிப்பு டாங்கிக்கு டீசல் மாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.
என அவர் கூறினார்.
தேவைக்கேற்ப இந்த கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இரவு நேரங்களில் டீசலை இழுவைப் படகிலிருந்து சேமிப்பு டாங்கிற்கு மாற்றும் கும்பல் பின்னர் லோரிகள் மூலம் அந்த எரிபொருளை விற்பனை செய்து வந்துள்ளது என அவர் சொன்னார்.
அந்த இழுவைப் படகு பணியாளர்களான 30 முதல் 50 வயதுக்குட்பட்ட ஒரு உள்நாட்டு ஆடவரும் மூன்று வெளிநாட்டு பிரஜைகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இன்று பாகன் ஹைலாம் படகுத் துறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.
இழுவைப் படகின் உரிமையாளர் என்று கூறிக்கொள்ளும் உள்ளூர் நபர் ஒருவர் இச்சோதனையின் போது சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், எனினும் டீசல் பரிவர்த்தனைகளுக்கான சரியான ஆவணங்கள் அல்லது உரிமங்களை அவர் வழங்கத் தவறியதாகவும் அஸ்மான் மேலும் தெரிவித்தார்.
இச்சோதனையில் 900,000 வெள்ளி மதிப்புள்ள இழுவை படகு, படகில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் சேமிப்பு டாங்கி, இணைப்பு குழாய்கள், தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பிற உபகரணங்கள் பறிமுதல் செய்யப் பட்டன என்றார் அவர்.