ஷா ஆலம், ஜன. 12- இவ்வாண்டிற்கான ஜூவாலான் ஏஹ்சான் ரஹ்மா மலிவு நாளை ஜனவரி 13ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை மலிவான விலையில் விற்பனை செய்யும் இந்த திட்டம் வாகன மற்றும் கிடங்கு பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 12 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) கூறியது.
புத்தாண்டு பொது விடுமுறை, வாகன மற்றும் கிடங்கு பராமரிப்பு ஆகிய காரணங்களுக்காக இந்த ஏஹ்சான் ரஹ்மா விற்பனைக்கு ஜனவரி 1 முதல் 12 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது என்று அக்கழகம் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.
கடந்த காலங்களில் இந்த மலிவு விற்பனையில் ஆறு முக்கியப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இவ்வாண்டு தொடங்கி அந்த எண்ணிக்கை 12 பொருள்களாக அதிகரிக்கப்படும் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷிம் கூறினார்.
இந்த ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையை அமல் செய்ய மாநில அரசு இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 3 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவும் நோக்கில் மாநில அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இவ்வாண்டு இறுதிக்குள் மாநிலத்தில் 10 ஏஹ்சான் மார்ட் கடைகளை திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்தாண்டு இறுதியில் தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.
சுங்கை துவா மற்றும் பாண்டான் இண்டாவில் இத்தகைய கடைகள் திறக்கப்பட்டுள்ள வேளையில் உலு கிளாங்கில் புதிய கிளை விரைவில் திறக்கப்படவுள்ளது.
பி.கே.பி.எஸ். ஏற்பாட்டிலான இந்த கடைகள் சந்தையை விட 10 முதல் 15 விழுக்காடு குறைவான விலையில் பொருள்களை விற்பனை செய்கின்றன.
வரும் 2027ஆம் ஆண்டுவாக்கில் மாநிலத்தின 56 தொகுதிகளிலும் இந்த ஏஹ்சான் மார்ட் கடைகளைத் திறக்க பி.கே.பி.எஸ். திட்டமிட்டுள்ளது.