நிபோங் திபால், ஜன. 12- இங்குள்ள ஜாலான் சுங்கை கெச்சிலில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் சக நாட்டவரை வெட்டி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக நம்பப்படும் மியன்மார் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இம்மாதம் 10 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் குடிபோதையில் இருந்த சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக செபராங் பிறை செலாத்தான் மாவட்ட காவல்துறை தலைமையகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவரை சந்தேக நபர் கத்தியால் வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தை கண்ட அவர்களின் நண்பர் காயமடைந்த நபரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார்.
அதனைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேக நபரின் முதலாளி என்று நம்பப்படும் மியன்மார் ஆடவர் ஒருவரை போலீஸார் தடுத்து வைத்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய நபரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உடலில் நான்கு இடங்களில் வெட்டுக்களுக் காயங்களுக்குள்ளான 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வேண்டுமென்றே கடுமையான காயத்தை ஏற்படுத்தியது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326 இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.