கோலாலம்பூர், ஜன. 12 – இங்கு அருகிலுள்ள தாமான் புக்கிட் அம்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் ஏழு வயது சிறுவனை சித்திரவதை செய்து கொன்ற சந்தேகத்தின் பேரில் ஒரு பெண்மணியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர்.
தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் சுவாசிக்கவில்லை என்று அந்தப் பெண் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.36 மணியளவில் தெரிவித்ததை தொடர்ந்து சிறுவனின் தாயும் அவரது காதலரும் தடுத்து வைக்கப்பட்டதாக அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் முகமது ஆஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
முகம், கழுத்து, கைகள் மற்றும் கால்களில் காயங்களுடன் காணப்பட்ட சிறுவனின் மரணத்தை போலீஸாரும் மருத்துவ உதவியாளர்களும் உறுதிப்படுத்தினர்.
கோலாலம்பூர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதுதான் அச்சிறுவனின் மரணத்திற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.
மேலும், வீட்டில் அச்சிறுவன் கனமானப் பொருளால் பலமுறை தாக்கப்பட்டது முதற்கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது. விசாரணையில் உதவுவதற்காக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயாரான 25 வயதுப் பெண் மற்றும் அவரது 36 வயது காதலன் ஆகியோர் அதே நாளில் மாலை 5.15 மணிக்கு கைது செய்யப்பட்டனர் என்று ஆஸாம் கூறினார்.
விற்பனையாளராக பணிபுரியும் சந்தேக நபர் போதைப் பொருள் பழக்கம் உள்ளவர் என்பது சிறுநீர்ப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதோடு அவருக்கு மூன்று முந்தைய குற்றப் பதிவுகளும் உள்ளன என்றார் அவர்.
இரண்டு சந்தேக நபர்களும் ஜனவரி 17ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்ளவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று ஆஸாம் குறிப்பிட்டார்..