பாலிக் பூலாவ், ஜன. 12- மாட் ரெம்பிட் எனப்படும் சாலை ரவுடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இங்குள்ள சுல்தான் அப்துல் ஹலீம் முவாட்ஸாம் ஷா பாலத்தில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 60 மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அந்த பாலத்தைப் பயன்படுத்துவோரின் புகார் மற்றும் அங்கு சட்டவிரோத பந்தய நடவடிக்கைகள் நடப்பது தொடர்பான உளவுத்துறையின் கண்காணிப்பின் பேரில் இன்று அதிகாலை 4.00 மணிக்கு இந்த சோதனை நடவடிக்கை தொடங்கியதாக
பாராட் டாயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சசாலீ ஆடம் கூறினார்.
இந்நடவடிக்கையின் போது சோதனை செய்யப்பட்ட 120 மோட்டார் சைக்கிள்களில் 60 மோட்டார் சைக்கிள்கள் பல்வேறு குற்றங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்டன. அடையாளம் காணப்பட்ட குற்றங்களில் மோட்டார் சைக்கிள்களை மாற்றியமைத்தது மற்றும் ஆபத்தான முறையில் “சூப்பர்மேன்” சாகசம் செய்ததும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
ஆடவர் ஒருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் தனது மோட்டார் சைக்கிளில் போலி பதிவு எண்ணைப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் போலி இயந்திர எண்ணையும் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் அவருடையதா அல்லது திருடப்பட்டதா என்பதைக் கண்டறிய அந்த நபரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஓட்டுநர் உரிமம் இல்லாதது, வாகனப் பதிவு எண் பட்டை விதிமுறைக்கு ஏற்ப இல்லாதது மற்றும் சாலை வரி புதுப்பிக்கப்படாதது உட்பட பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 170 குற்றப் பதிவுகளைத் தாங்கள் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத மாட் ரெம்பிட் கும்பல்களின் மையமாக இருக்கும்
சீகேட் அருகே உள்ள டாக்டர் லிம் சோங் யூ நெடுஞ்சாலைப் பகுதியிலும் தாங்கள் இதே போன்ற நடவடிக்கையை மேற்கொண்டதாக சசாலீ கூறினார்.