கோலாலம்பூர், ஜன .14- ஐக்கிய அரசு சிற்றரசுக்கு (யு.ஏ.இ.) தாம் மேற்கொண்ட பயணத்தின் எதிரொலியாக சுகாதார பராமரிப்பு, விமான நிலைய நிர்வாகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் நீண்டகால அடிப்படையில் மலேசியா முதலீடுகளைப் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அந்நாட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தனது எக்ஸ் தளப் பதிவில் இதனைத் தெரிவித்தார்.
அபுதாபி முதலீட்டு முகமைக்கும் (ஏ.டி.ஐ.ஏ.) மலேசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு நாட்டின் நீடித்த மற்றும் போட்டியிடத்தக்க வளர்ச்சிக்கான சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதர உலக முதலீட்டு நிறுவனங்களின் குரலை ஏ.டி.ஐ.ஏ. பிரதிநிதித்தது. இதன் வழி பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை மலேசியா பெறுவதற்குரிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சுகாதாரப் பராமரிப்பு, விமான நிலைய நிர்வாகம் மற்றும் எரிசக்தி துறைகளில் நீண்ட கால அடிப்படையில் முதலீடுகளைப் பெறுவது சாத்திமற்ற ஒன்றல்ல என்று அவர் சொன்னார்.
ஐக்கிய அரபு சிற்றரசுக்கான தனது பயணத்தின் இரண்டாவது தினமான நேற்று அந்நாட்டின் மூன்று செல்வாக்குமிக்க தலைவர்களுடன் அன்வார் சந்திப்பு நடத்தினார். ஏ.டி.ஐ.ஏ. நிர்வாக இயக்குநர் ஷேக் ஹமிட் சையட் அல் நாஹ்யான், தலைமைச் செயல்முறை அதிகாரி முபாடாலா கல்டூன் கலிபா மற்றும் தலைமை செயல்முறை அதிகாரி மஸ்டார் முகமது ஜமீல் அல் ரமாஹி ஆகியோரே அந்த முக்கியத் தலைவர்களாவர்.