MEDIA STATEMENTSELANGOR

இன்ஃப்ராசெல் நிறுவனத்திற்கு மேலும் ஒரு சாலை செப்பனிடும் இயந்திரம்- மாநில அரசு வழங்கும்

ஷா ஆலம், ஜன. 14- சிலாங்கூரில் உள்ள சாலைகளில் செப்பனிடப்படும் பழுதடைந்தப் பகுதிகள்  நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிப்பதை உறுதி செய்ய இன்ஃப்ராசெல் சென்.பெர்ஹாட் நிறுவனத்திற்கு மேலும் ஒரு ஜெட்பேட்சர் இயந்திரத்தை மாநில அரசு வழங்கவுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் முந்தைய நடைமுறையைக் காட்டிலும் வலுவானதாகவும் அதிக உஷ்ணமானதாகவும் உள்ளதால் சாலைகளில் குழிகள் ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் செப்பனிடும் பணிகள் நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் வகையில் உள்ளன என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக சாலைகள் வலுவுடன் இருப்பது உறுதி செய்யப்படும் அதேவேளையில் மிக குறுகிய காலத்திலும் பணிகளை மேற்கொள்ள முடியும். இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்படும் இந்த இயந்திரம் மூன்று மடங்கு பணிகளை விரைவுபடுத்த உதவுகிறது என்று அவர் மீடியா சிலாங்கூர் தொடர்பு கொண்ட போது கூறினார்.

மாநிலத்தில் உள்ள பழுதடைந்த சாலைகளை செப்பனிடுவதற்கு பத்து லட்சம் வெள்ளி செலவிலான இந்த ஜெட்பேட்சர் இயந்திரத்தை மாநில அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வாங்கியது.

இந்த இயந்திரம் தொடக்கக் கட்டமாக கோல சிலாங்கூரில் பயன்படுத்தப்படுகிறது. அதன் பிறகு தேவையின் அடிப்படையில் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்.

இதனிடையே, லோரிகள் புக முடியாத மிகவும் குறுகலான பாதைகளில் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்வதற்கு தெர்மல்பேட்சர் எனும் இயந்திரத்தை மாநில அரசு வாங்கவுள்ளதாகவும் இஷாம் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் மெகா சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 5 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. 


Pengarang :