புத்ராஜெயா, ஜன. 14- கடந்தாண்டு முழுவதும் 5,267 கோடி வெள்ளி நிகர மேம்பாட்டு மதிப்பிலான 59,050 வீடுகளை உள்ளடக்கிய 475 பிரச்சினைக்குரிய மற்றும் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு வெற்றிகரமாக புத்துயிரளிக்கப் பட்டுள்ளது.
அவற்றில் 441 திட்டங்களுக்கு பூர்த்தி மற்றும் பின்பற்றல் (சி.சி.சி.) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை துணையமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு கூறினார்.
தாமதமானவை என வகைப்படுத்தப்பட்ட மேலும் 25 திட்டங்கள் தற்போது துரித்தப்படுத்தப்பட்டுள்ள வேளையில் கைவிடப்பட்ட ஒன்பது திட்டங்களுக்கு மீண்டும் உயிரூட்டப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
கடந்த 2023ஆம் ஆண்டு 3,981 கோடி வெள்ளியாக இருந்த புத்துயிரூட்டப்பட்ட வீடமைப்புத் திட்டங்களின் நிகர மேம்பாட்டு மதிப்பு கடந்தாண்டு 30.62 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு பிரச்சினைக்குரிய மற்றும் கைவிடப்பட்ட தனியார் வீடமைப்பத் திட்டங்கள் தொடர்பான பணிக்குழு கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் துணையமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டு சி.சி.சி. சான்றிதழ் பெற்ற வீடமைப்புத் திட்டங்களின் 394ஆக இருந்த வேளையில் கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 11.93 விழுக்காடு உயர்வு கண்டது. அதே சமயம் கடந்த 2023ஆம் ஆண்டு 39,028ஆக இருந்த சி.சி.சி. சான்றிதழ் பெற்ற வீடுகளின் எண்ணிக்கை கடந்தாண்டு 54,420ஆக அதிகரிப்பை கண்டது என்றார் அவர்.
கடந்தாண்டு டிசம்பர் 31 வரை நாட்டில் தனியார் மேம்பாட்டாளர்கள் சம்பந்தப்பட்ட தாமதமான 249 வீடமைப்புத் திட்டங்கள், பிரச்சினைக்குரிய 392 திட்டங்கள் மற்றும் கைவிடப்பட்ட 113 திட்டங்களை அந்த பணிக்குழு அடையாளம் கண்டு கண்காணிப்பை மேற்கொண்டது என்று அஸ்மான் மேலும் தெரிவித்தார்.