NATIONAL

மாரான்-கோத்தா பாரு இ.சி.ஆர்.எல். திட்டப் பணி முன்கூட்டியே முற்றுப்பெறும் – 2027இல் சேவை தொடங்கும்

கோத்தா பாரு, ஜன. 16 – கிழக்கு கடற்கரை இரயில் திட்டத்தின்
(இ.சி.ஆர்.எல்.) பகாங் மாநிலத்தின் மாரான் முதல் கிளந்தானின் கோத்தா
பாரு வரையிலான 400 கிலோ மீட்டர் பகுதியில் தண்டவாளங்களைப்
பொறுத்தும் பணி நிர்ணயிக்கப்பட்டதை விட இரண்டரை மாதம்
முன்கூட்டியே முற்றுப் பெறும் என்று மலேசிய ரெயில் லிங்க்
(எம்.ஆர்.எல்.) சென். பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை
அதிகாரி டத்தோஸ்ரீ டார்விஸ் அப்துல் ரசாக் கூறினார்.

இதுவொரு சிறப்பான அடைவு நிலை என்பதோடு எதிர்வரும் 2026ஆம் ஆண்டு
டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும் இலக்கை நோக்கி இத்திட்டம்
பயணிப்பதை இது உறுதிப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.

மாரான் முதல் கோத்தா பாரு வரையிலான பகுதியில் பிரதான
தண்டவாளங்களை அமைப்பதன் மூலம் வரும் 2027 ஜனவரி தொடங்கி
இ.சி.ஆர்.எல். சேவையை தொடங்க இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த இ.சி.ஆர்.எல். திட்டம் சரியான தடத்தில் உள்ளதோடு சீரான
முறையிலும் செல்கிறது. இந்த மெகா திட்டத்தை தாமதப்படுத்தக்கூடிய
எந்த பெரிய பிரச்சினையும் எழவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மாரான் முதல் கோத்தா பாரு வரையிலான இரயில் திட்டத்திற்கான
தண்டவாளம் பொருத்தும் இறுதிக் கட்டப் பணியை பார்வையிட்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பர் வரை கிளந்தான் மாநிலத்தில் இ.சி.ஆர்.எல். திட்டம்
87.80 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாகவும் டார்விஸ் சொன்னார்.

கிளந்தான் மாநிலத்தைப் பொறுத்த வரை இந்த இ.சி.ஆர்.எல். திட்டத்தில்
இரு இரயில் முனையங்கள் அமைக்கப்படும். கோத்தா பாரு, பண்டார்
பாரு துஞ்சாங்கில் அமைக்கப்படும் நிலையம் பயணிகளுக்கானதாகவும் பாசீர் பூத்தே செங் துலியில் அமைக்கப்படும் திட்டம் பயணிகள் மற்றும் சரக்குகளை கையாளும் முனையமாகவும் செயல்படும் என்றார் அவர்.

மொத்தம் 665 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த இரயில் திட்டம்
கிழக்குக் கரை மாநிலங்களான கிளந்தான், திரங்கானு மற்றும்
பகாங்கையும் சிலாங்கூரையும் இணைக்கிறது.


Pengarang :