காஜாங், ஜன. 16 – அடுத்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் குறைந்தபட்சம் 15 கோடி வெள்ளி பிரீமியத் தொகையை வசூலிக்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
சிலாங்கூரில் தற்போது இயங்கி வரும் 6,690 சட்ட விரோத தொழிற்சாலைகளில் 80 சதவீதத்திற்கும் மேல் பதிவு செய்யப்படுவதை தாங்கள் உறுதி செய்ய விரும்புவதாக ஊராட்சி மற்றும் சுற்றுலாத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி லிம் கூறினார்
இருப்பினும், ஊராட்சி மன்றச் சட்டங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் அதே வேளையில் இரு தரப்புக்கும் பயன்தரத்தக்க தீர்வைக் கண்டறிய மாநில அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
தொழிற்சாலை நடத்துபவர்கள் முன் வந்து எங்களுடன் பேச வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்களில் பலர் முறையான உரிமம் இல்லாமல் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான அனுமதிகளைப் பெற நாங்கள் உதவ விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள செம்பாக்கா மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் 2025-2027 (தெற்கு மண்டலம்) அங்கீகரிக்கப்படாத தொழிற்சாலைகளின் இணக்கத் திட்டம் மற்றும் அமலாக்கம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வுக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
மாநிலத்தின் மத்திய மண்டலத்தில் அமைந்துள்ள சட்டவிரோத தொழிற்சாலைகள் மீது இங் நடத்திய இரண்டாவது டவுன் ஹால் கலந்துரையாடல் நிகழ்வு இதுவாகும். முதலாவது ஷா ஆலமில் நடைபெற்றது.
தொழிற்சாலை நடத்துநர்கள் தங்கள் வணிகங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஊக்குவிப்பதற்காக மாநில அரசு தொடர்ச்சியான சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் இங் குறிப்பிட்டார்.