ஷா ஆலம், ஜன. 23 – கால்நடைகளை வளர்ப்பதற்கான மூன்று மாற்று இடங்களைப் பரிந்துரைப்பதன் மூலம் சபாக் பெர்ணம் அருகிலுள்ள எஸ்டி கத்ரி தோட்ட கால்நடை வளர்ப்போரின் பிரச்சினையை இரு தரப்புக்கும் சாதகமான முறையில் தீர்ப்பதற்குரிய அணுகுமுறையை மாநில அரசு எடுத்துள்ளது.
சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து நோட்டீஸ் பெற்ற கால்நடை வளர்ப்போர் தங்கள் பண்ணை நடவடிக்கைகளைத் தொடர உதவும் முயற்சியின் ஒரு பகுதியே இந்தத் தீர்வு என்று கிராம மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் கூறினார்.
சுங்கை அப்போங், பெர்த்திங் கெப்பாவில் சபாக் பெர்ணம் கால்நடைத் துறையின் அரசிதழில் வெளியிடப்பட்ட நிலம், சுங்கை பஞ்சாங் முக்கிமில் உள்ள சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்திற்கு (பிகேபிஎஸ்) சொந்தமான நிலம் அல்லது பாகான் தெராப் நகரில் உள்ள சபாக் பெர்ணம் நிர்வாகத்தின் அரசிதழில் வெளியிடப்பட்ட நிலம் ஆகியவையே அந்த உத்தேச இடங்களாகும் என அவர் சொன்னார்.
கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் அடைக்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும். கால்நடை வளர்ப்போர், பண்ணை நடத்துநர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மாநில அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த அணுகுமுறையின் மூலம் எட்டப்பட்ட தீர்வு நியாயமானது மட்டுமல்ல, அனைத்து தரப்பினரும் எதிர்கொள்ளும் சவால்கள் மீது கொண்டிருக்கும் அனுதாபத்தின் அடிப்படையிலானது என்றும் அவர் கூறினார்.
சபாக் பெர்ணமில் உள்ள எஸ்டி தோட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தங்கள் கால்நடைகளை பாதுகாப்பான பகுதிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டதாகக் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரிசாம் தெரிவித்தார்.
கால்நடைகள் சாலைப் பயணிகளின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள காரணத்தால் 1,000க்கும் மேற்பட்ட மாடுகளை இடம் மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.