NATIONAL

ஐந்தாண்டுகளுக்கும் மேல் முகப்பிடங்களில் பணிபுரியும் ஜே.பி.ஜே. பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவர்

புத்ராஜெயா, ஜன. 24- நாடு முழுவதும் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக
முகப்பிடப் பணியில் ஈடுபட்டுள்ள 1,907 பணியாளர்களை இடமாற்றம்
செய்யும் நடைமுறையை சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.)
அமல்படுத்தவுள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு மேலாக முகப்பிடங்களில் பணி புரியும் அரசாங்க
ஊழியர்களுக்கு சுழற்சி முறையை அமல்படுத்தும் கொள்கை தொடர்பில்
அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாக்கார்
வெளியிட்டுள்ள உத்தரவுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக
ஜே.பி.ஜே. தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி கூறினார்.

பொதுச் சேவைத் துறையிடம் சமர்ப்பிப்பதற்காக சம்பந்தப்பட்ட முகப்பிட
பணியாளர்களின் பெயர்ப் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஜே.பி.ஜே.
ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பணி சுழற்சி முறையின் வாயிலாக ஜே.பி.ஜே. முகப்பிடங்கள்
வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான, ஆக்ககரமான மற்றும்
தரமான சேவையை வழங்க இயலும் எனத் தாங்கள் நம்புவதாக அவர்
குறிப்பிட்டார்.

இது தவிர, ஜே.பி.ஜே. முகப்பிடங்களில் பணி புரியும் பணியாளர்களின்
உயர்நெறிக்கு முக்கியத்துவம் தரும் அணுகுமுறையாகவும் இது
விளங்குகிறது. மேலும், சேவை வழங்குவதில் ஜே.பி.ஜே. பணியாளர்களின்
திறன் மற்றும் அனுபவத்தை உயர்த்துவதிலும் இந்த நடவடிக்கை துணை
புரியும் என்றார் அவர்.

பொதுச் சேவைத் துறையின் மறுசீரமைப்புக்கு ஏற்ப சிறப்பான சேவையை
மக்களுக்கு வழங்கும் ஜே.பி.ஜே.வின் கடப்பாட்டிற்கு ஏற்பவும் இந்த
நடவடிக்கை அமைந்துள்ளது என்று அவர் நேற்று இங்கு வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் கூறினார்.


Pengarang :