கோலாலம்பூர், ஜன. 24 – காய்கறித் தோட்டம் ஒன்றில் கட்டாயத்
தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எட்டு
வங்காளதேச ஆடவர்களை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
கிளந்தான் மாநிலத்தின் குவா மூசாங், தானா திங்கி லோஜிங்கில் உள்ள
காய்கறித் தோட்டம் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை
மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 27 முதல் 47 வயது வரையிலான
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
அனைத்து தொழிலாளர்களும் அந்த காய்கறித் தோட்டத்தில் வேலை
செய்த வந்த நிலையில் அவர்களில் சிலருக்கு ஏழு மாதங்கள் வரை
ஊதியம் கொடுக்கப்படவில்லை என்று புக்கிட் அமான் டி3 தலைமை
உதவி இயக்குநர் எஸ்ஏசி சோபியான் சந்தோங் கூறினார்.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் டி3 எனப்படும் மனித
வர்த்தக மற்றும் புலம் பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள்
மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு இம்மாதம் 21ஆம் தேதி பிற்பகல்
12.30 மணியளவில் இந்த அதிரடிச் சோதனையை நடத்தியதாக அவர்
தெரிவித்தார்.
இந்த சோதனையின் போது அந்த காய்கறித் தோட்டத்தின் உரிமையாளர்
மற்றும் உதவியாளர்கள் உள்பட மூன்று உள்நாட்டினரும் கைது
செய்யப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
மேலும், இந்த சோதனையில் வங்காளதேசிகள், மியன்மார், இலங்கை
மற்றும் இந்தோனேசிய பிரஜைகளை உள்ளடக்கிய 21 பேரைத் தாங்கள்
தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்ட அந்நிய நாட்டினர் அனைவரும் 1959/63ஆம் ஆண்டு
குடிநுழைவுச் சட்டத்தின் 6(1)(சி) பிரிவு மற்றும் 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவு விதிமுறைகளின் 39(பி) பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.