மூவார், ஜன. 24- டிரெய்லரின் பின்புறம் லோரி மோதியதில் அதன்
ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் வடக்கு-தெற்கு
நெடுஞ்சாலையின் 132.3வது கிலோ மீட்டரில் தெற்கு நோக்கிச் செல்லும்
தடத்தில் நேற்று காலை நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் காலை 7.00 மணிக்கு பொதுமக்களிடமிருந்து
தாங்கள் தகவலைப் பெற்றதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
ராய்ஸ் முக்லிஸ் அஜிஸ் கூறினார்.
இந்த விபத்து நிகழ்ந்த போது சம்பந்தப்பட்ட டிரெய்லர் லோரி
கோலாலம்பூரிலிருந்து ஜோகூர் பாரு நோக்கிச் சென்று கொண்டிருந்தது
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர்
சொன்னார்.
சம்பவ இடத்தை அடைந்த போது அந்த டிரெய்லரை எஸ்.தேவேந்திரன்
(வயது 44) என்ற ஆடவர் ஓட்டிச் சென்ற லோரி பின்புறம் மோதியது.
இதன் காரணமாக அவர் கடுமையான காயங்களுக்குள்ளானார் என்று அவர்
அறிக்கை ஒன்றில் கூறினார்.
மூவார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட தேவேந்திரன் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்ததாகக் கூறிய அவர், இந்த விபத்து தொடர்பில்
1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ்
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.