சிரம்பான், ஜன.24 – இம்மாவட்டத்தில் மூன்று வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் ஆடவர் ஒருவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் 37 வயதுடைய அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதன் மூலம், அதே நாளில் அதிகாலை 3.00 மணி முதல் 6.00 மணிக்குள் அவர் வீடு புகுந்து கொள்ளையிடும் சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஹட்டா சே டின் தெரிவித்தார்.
அந்த ஆடவரிடமிருந்து டிசைனர் கைப்பைகள், வெளிநாட்டு நாணயம், கைக்கடிகாரங்கள், கைபேசிகள், வாசனை திரவியங்கள், உடைகள், மோதிரங்கள் மற்றும் தங்கக் கட்டிகள் உள்பட 10,000 வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
செனவாங், தாமான் டேசா ரோஸில் உள்ள தனது வீட்டில் திருடர்கள் நுழைந்தது தொடர்பில் ஒரு பெண்ணிடமிருந்து தங்களுக்கு நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் தகவல் கிடைத்தது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சந்தேக நபருக்கு ஒன்பது போதைப்பொருள் குற்றங்கள் உட்பட 17 முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், சிறுநீர் பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டதாகவும் முகமது ஹட்டா கூறினார்.
சந்தேகநபர் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117 மற்றும் குற்றவியல் சட்டப் பிரிவு 38இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.