NATIONAL

கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் விழுந்தது – ஆடவர் மரணம்

ஷா ஆலம், பிப். 6 – நேற்று அதிகாலை தஞ்சோங் காராங்,  கம்போங் சுங்கை தெங்கியில் கார் ஒன்று  கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்த சம்பவத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஆடவர்  ஒருவர் எட்டு மணி நேரத்திற்கு பிறகு   பிற்பகல் 3.00 மணியளவில் தீயணைப்பு வீரர்களால் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

விபத்து நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் கால்வாய் ஓரமுள்ள புதரில் 32 வயதுடைய அந்நபரின் உடல் முக்குளிப்பு குழுவால் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு  உதவி  இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு அதிகாலை 5.56 மணிக்குத் தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.

காலை 8.55 மணிக்கு 3.6 மீட்டர் ஆழமுள்ள கால்வாயிலிருந்து கார் வெளியே எடுக்கப்பட்டது. அதில்  ஆடவர் ஒருவர் இருந்ததாக  சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறிய போதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

முக்குளிப்பு பிரிவின் தேடுதல் நடவடிக்கையின் வழி இறுதியாக அவ்வாடவரின் உடல்  கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த ஆடவரின் உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக தஞ்சோங் காராங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அகமது முக்லிஸ் கூறினார்.


Pengarang :