ஷா ஆலம், பிப். 7- அடுத்தண்டில் மலேசியா விளையாட்டுப் போட்டிகளை (சுக்மா) நடத்தவிருக்கும் சிலாங்கூர், அதில் மின் விளையாட்டுப் போட்டிகளை ஒரு அங்கமாகச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு சரவாக்கில் நடைபெற்ற சுக்மா போட்டியில் இவ்விளையாட்டுகளுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பதக்கங்களை பெற்றுத் தரும் திறன் மற்றும் வாய்ப்புகள் கொண்ட மின்-விளையாட்டு வீரர்கள் அணியை சிலாங்கூர் கொண்டுள்ளது என்று விளையாட்டுண் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
இது ஒரு முக்கிய விளையாட்டு இல்லையென்றாலும் 2024 சுக்மா போட்டியில் இது பிரபலமடைவதைக் கண்டோம். எனவே இதனைத் (மின்- விளையாட்டு நிகழ்வு) தொடர சிலாங்கூர் திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
தேசிய விளையாட்டு மன்றத்தின் (எம.எஸ்.என்.) தலைமை இயக்குநர் அப்துல் ரஷிட் யாகோப்பை சிலாங்கூர் சுக்மா 2024 செயலகம் சந்தித்து ஏற்பாடு செய்யப்படும் விளையாட்டு நிகழ்வுகள் குறித்து விவாதித்துள்ளது என்று அவர் கூறினார்.
நோன்பு பெருநாளுக்குப் பிறகு விளையாட்டு நிகழ்வுகள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள செக்சன் 13, ஏயோன் ஷா ஆலம் பேரங்காடியில் நடைபெற்ற சிலாங்கூர் ஃபியூச்சர் கிண்ணம் 2025 போட்டிக்கான செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்
கார்ல்டன் ஹோட்டலில் உள்ள மின் விளையாட்டு மண்டபத்தின் மேம்பாடு குறித்து வினவப்பட்டபோது, அதனை சீர்படுத்தும் பணியை சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் (எம்பிஐ) மேற்கொள்ளும் என்று நஜ்வான் தெரிவித்தார்.