NATIONAL

தரையிறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்ததால் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது

பெந்தோங், பிப் 7: பெந்தோங்கின் 9-வது மைல் பழைய சாலை அருகே தரையிறங்கிய Bell 206 L4 ரக ஹெலிகாப்டர், கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தடம் புரண்டு தீப்பிடித்து எரிந்ததை பெந்தோங் மாவட்ட காவல்துறை உறுதிப்படுத்தியது.

எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கிய ஹெலிகாப்டர், கட்டுப்பாட்டை இழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, மாவட்ட காவல்துறை தலைவர் சுப்ரிடெண்டன் சைஹாம் முஹமட் கஹார் கூறினார்.

“சம்பவத்தை நேரில் பார்த்தவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் மூலம் காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், காலை மணி 10.20 அளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அச்சம்பவத்தில், இந்தோனேசியாவைச் சேர்ந்த 27 வயதான களப் பணியாளர் ஃபின்சன் ரெஸ்கி செம்பிரிங், ஹெலிகாப்டரின் முதன்மை விசிரி தாக்கி பலியானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், 44 வயதான குஸ்தியடி எனும் விமானி சிறிய காயங்களுடன், மேல் சிகிச்சைக்காகப் பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனிடையே, இந்த விமான விபத்தில் பலியானவரின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக, இன்று காலை 11 மணிக்கு பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.


Pengarang :