ஜெருசலம்/வாஷிங்டன், பிப் 7- போர் முடிவுக்கு வந்தவுடன் காஸாவை
இஸ்ரேல் அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என அமெரிக்க அதிபர்
டோனால்டு டிரம்ப் கூறினார். அங்குள்ள குடியிருப்பாளர்கள் அப்போது
இடமாற்றம் செய்யப்பட்டிருப்பர் என்றும் களத்தில் அமெரிக்க
இராணுவத்தின் உதவி தேவைப்படாது என்பது இதன் பொருளாகும்
என்றும் அவர் தெரிவித்தார்.
காஸாவை தாங்கள் கையகப்படுத்தி “மத்திய கிழக்கின் ரைவீராக“ மாற்றப்
போவதாகவும் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு உலகம் முழுவதும் கடும்
கண்டனம் எழுந்துள்ள நிலையில் காஸா மக்கள் சுயவிருப்பத்தின் பேரில்
வெளியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி இஸ்ரேல் தனது
இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, காஸாவுக்கு அமெரிக்கத் துருப்புகள் அனுப்பப்படும்
சாத்தியத்தை நிராகரிக்க மறுத்த டிரம்ப், தனது ட்ரூட் சமூக
வலைத்தளத்தில் தனது கருத்தினை தெளிவுபடுத்தியுள்ளார்.
போர் முடிந்தவுடன் காஸாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்
ஒப்படைக்கும். பாலஸ்தீன மக்கள் அந்த பிராந்தியத்தில் நவீன
குடியிருப்புகளுடன் பாதுகாப்பான மற்றும் அழகான சமூகமாக இட
மாற்றம் செய்யப்பட்டிருப்பர் என அவர் சொன்னார்.
இந்த பணிக்கு அமெரிக்கத் துருப்புகளின் உதவி தேவைப்படாது என அவர்
தெரிவித்தார்.
பாலஸ்தீனர்கள் காஸாவிலிருந்து சுயவிருப்பத்தின் பேரில்
வெளியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரும்படி தனது
இராணுவத்திற்கு இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் முன்னதாக
உத்தரவிட்டிருந்தார்.
அதிபர் டிரம்ப்பின் துணிச்சலான முடிவை வரவேற்கிறேன். காஸா மக்கள்
சுதந்திரமாக வெளியேறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இதுவே உலக நியதி என அவர் கூறினார்.
தரை மார்க்கம் தவிர்த்து, கடல் மற்றும் வான் மார்க்மாகவும் அவர்கள்
வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என அவர் சொன்னார்.