கோலாலம்பூர், பிப். 7 – சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இப்பேரிடர் காரணமாக இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று காலை 8.00 மணி நிலவரப்படி இரு மாநிலங்களிலும் மொத்தம் 5,313 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
இதனிடையே, சரவாக் மாநிலத்தில் உள்ள 24 நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை 4,705 பேராக அதிகரித்துள்ளது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 4,341 பேராக இருந்தது.
இம்மாநிலத்தின் பிந்துலு, சிபு, மிரி மற்றும் முக்கா ஆகிய நான்கு பிரிவுகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பிந்துலுவில் உள்ள ஐந்து நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை 1,612 பேரிலிருந்து 1,880 பேராக உயர்ந்துள்ளதை சரவாக் பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் உறுதிப்படுத்தியது.
அதே சமயம், சிபுவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 பேரிலிருந்து 1,186 பேராகவும் மிரியில் 917 பேரிலிருந்து 961 பேராகவும் முக்காவில் 575 பேரிலிருந்து 614 பேராகவும் அதிகரித்துள்ளது.
எனினும், மற்ற இரண்டு பிரிவுகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. சமரஹானில் 51 பேரும் சரிகேயில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சபாவில் நேற்று இரவு 479 பேராக இருந்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 608 பேராக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்தது.