ஷா ஆலம், பிப். 9- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பத்துமலைத் திருத்தல வருகை இந்திய சமூகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அக்கறைக்கு சான்றாக விளங்குகிறது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
மலேசியாவில் வாழும் இந்து மக்கள் வரும் செவ்வாய்க்கிழமை தைப்பூச விழாவை கொண்டாடவுள்ளனர். நாட்டில் தைப்பூச கொண்டாட்டத்திற்கு தாய் கோவிலாக பத்துமலை, ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் தேவஸ்தானம் விளங்குகிறது. இதன் அடிப்படையில் இந்த தைப்பூச விழா ஏற்பாடுகளை காண பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பத்துமலைக்கு வந்திருந்தார்.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா பிரதமரை மாலை அணிவித்து பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார். பத்துமலைக்கு பிரதமர் மேற்கொண்ட இந்த வருகை இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அக்கறைக்கு ஒரு சான்றாகும். இது நம் நாட்டின் மகத்துவமாகவும் ஒற்றுமைக்கான வலுவான அடித்தளமாகவும் விளங்குகிறது என குணராஜ் சொன்னார்.
மேலும் சுற்றுலா அம்சங்கள் உட்பட பத்துமலை மேம்பாடு குறித்து ஆலய நிர்வாகத்தின் கோரிக்கைகளை பிரதமர் கவனமாகக் கேட்டறிந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடாணி அரசாங்கம் இந்திய சமூகத்தின் மேம்பாட்டில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருவதை இது மெய்ப்பிக்கிறது என்றார்.