கோல லங்காட், பிப். 9- சிலாங்கூர் மாநில அளவிலான சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு ஜென்ஜாரோமில் உள்ள ஃபோ குவாங் ஷான் டோங் ஜென் ஆலயத்தில் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது.
பல்வேறு இனங்களைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வுக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் தெங்கு ஹாஜா நோராஷிகின் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
சிலாங்கூர் டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, அவரின் துணைவியார் டத்தின் ஸ்ரீ மஸ்டியானா முகமது, முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் ஆகியோரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேன்மை தங்கிய சுல்தான் தம்பதியர் விழாவைத் தொடங்கி வைப்பதற்கு அடையாளமாக யீ சான் யீ சாங் நிகழ்வில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் நிகழ்வில் படைக்கப்பட்ட பலவேறு கலாசார நிகழ்வுகளைக் கண்டு களித்தனர்.
தெங்கு பெர்மைசுரி நோராஷிகின் மஸ்டியானாவுடன் இணைந்து 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கும் ‘அங்பாவ்’ வழங்கினார்.
சுல்தான் ஷராபுடின் மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் தம்பதியர் புறப்படுவதற்கு முன் கோயில் வளாகத்தில் உள்ள தங்லுன் விளக்கு அலங்காரத் தளத்தையும் மலர் கண்காட்சியையும் பார்வையிட்டனர்.