ஷா ஆலம், பிப். 12- ரவாங்-பத்தாங் பெர்ஜூந்தை சாலையில் 1.5 கிலோ
மீட்டர் பகுதியை இவ்வாண்டு தரம் உயர்த்த மாநில அரசு 81 லட்சத்து 50
ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
சாலையை விரிவாக்கும் மற்றும் உயர்த்தும் இத்திட்டத்தின் வாயிலாக
இப்பகுதியில் நிலவும் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காண
முடியும் என்பதோடு இங்கு அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சினையையும்
களைய முடியும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட்
கூறினார்.
ரவாங் மக்களுக்கு நற்செய்தி, எயோன் ரவாங் சந்திப்பு தொடங்கி கம்போங்
சுங்கை பாக்காவ் வரை சாலையை விரிவுபடுத்த மாநில அரசு நிதி
ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இச்சாலையைத் தரம் உயர்த்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இதன் மூலம் இங்கு நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும்
வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலும் என அவர் மீடியா
சிலாங்கூரிடம் கூறினார்.
இதனினிடையே, வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஒரு
கோடியே 50 லட்சம் வெள்ளி செலவில் ரவாங் ஒருங்கிணைந்த வெள்ள
நீர் சேகரிப்பு குள நிர்மாணிப்புத் திட்டம் இங்கு அமல்படுத்தப்பட்டு
வருவதாகவும் அவர் சொன்னார்.
இதன் கட்டுமானப் பணிகள் கடந்தாண்டு தொடங்கி விட்டன. இந்த திட்டம்
எப்போது முழுமையடையும் என்றத் தகவல் சிலாங்கூர் மாநில வடிகால்
மற்றும் நீர்பாசனத் துறையிடமிருந்து கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த
திட்டத்தின் கட்டுமானப் பணிகள் சீராக மேற்கொள்ளப்பட்டு வருவதாக
நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.