சிப்பாங, பிப். 12- போலீசார் மேற்கொண்ட இரு அதிரடி சோதனை நடவடிக்கைகளில் சரவா மாநிலத்திற்கு போதைப் பொருளைக் கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இம்மாதம் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ.) இரண்டாவது முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் மெத்தம்பெத்தமின் என நம்பப்படும் 18.97 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
சுமார் 607,200 வெள்ளி மதிப்புடையது என நம்பப்படும் இந்த போதைப் பொருள் சரவா மாநிலத்தில் விநியோகிக்கப்படவிருந்ததாக கே.எல்.ஐ.ஏ. மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்மான் ஷாரி கூறினார்.
அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்புவதற்காக உணவுப் பொட்டலங்கள் மற்றும் நொறுக்குத் தீனி பொட்டலங்களில் போதைப் பொருளை பதுக்கி வைப்பது இந்த கும்பலின் கடத்தல் பாணியாகும் என அவர் சொன்னார்.
அமலாக்க அதிகாரிகள் கண்டுபிடிப்பது சிரமம் எனக் கருதப்படும் சுய விமானப் பதிவுச் சேவையை அவர்கள் பயன்படுத்துவது வழக்கம் என்று இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
முதலாவது நபர் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் விமான நிலைய இரண்டாம் முனையத்தின் புறப்பாடு பகுதியில் கே.எல்.ஐ.ஏ. மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கைதான ஆடவர் கொடுத்த தகவலின் பேரில் சிப்பாங்கிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றைச் சோதனையிட்ட போலீசார் 8.43 கிலோ எடை கொண்ட மெத்தம்பெத்தமின் என நம்பப்படும் போதைப் பொருளை கைப்பற்றினர் என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து மறுநாள் விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் இரண்டாவது சந்தேகப் பேர்வழியைக் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10.54 கிலோ மெத்தம்பெத்தமின் போதைப் பொருளைக் கைப்பற்றினர் என்று அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்ட 19 மற்றும் 20 வயதுடைய அவ்விரு ஆடவர்களுக்கும் முந்தையக் குற்றப்பதிவுகள் ஏதும் இல்லை எனக் கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.