புத்ராஜெயா, பிப். 12- பல அரசு நிறுவனங்களின் பணிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருக்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏதுவாக அந்நிறுவனங்களை ஒருமுகப்படுத்துவதற்கான திட்டம் விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் முடிவு எடுப்பதற்கு முன்பு இது முதலில் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று நிதியமைச்சருமான அவர் சொன்னார்.
பல அரசு நிறுவனங்களை ஒருமுகப்படுத்துவதற்கான திட்டங்களை சமர்ப்பிக்க முன்னாள் கருவூல பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்ரி ஹமிடனை நான் பணித்துள்ளேன், பின்னர் அது அரசாங்கத் தலைமைச் செயலாளரிடம் கொண்டு வரப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அத்திட்டம் கூடிய விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு நான் ஒரு முடிவை எடுப்பேன் என்று இன்று நிதி அமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.
ஒரே பணியை இரு நிறுவனங்கள் மேற்கொள்ளும் பிரச்சினையைத் தீர்வு காண்பது மற்றும் தேசிய நிதியை சேமிப்பது தொடர்பான விவகாரங்களைக் கையாள மத்திய அரசு நிறுவனங்களை ஒருமுகப்படுத்துவது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள அரசாங்கம் ஒரு செயலகத்தை நிறுவியுள்ளதாக அன்வார் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த சிறப்புக் குழுவின் தலைவராக அஸ்ரி நியமிக்கப் பட்டுள்ளதாகவும் அவரின் நியமனம் கடந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் அமலுக்கு வருவதாகவும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் கூறியிருந்தார்.
இதற்கிடையில், பல நிறுவனங்கள் பெரும் இழப்புகளைப் பதிவு செய்த காரணத்தால் அரசு நிறுவனங்கள் உயர் மட்ட ஒப்புதல் இல்லாமல் தங்கள் கீழ் நிறுவனங்களை நிறுவ அனுமதிக்கப்படவில்லை என்று அன்வார் கூறினார்,
உயர் மட்டத்திலிருந்து ஒப்புதல் இல்லாமல் எந்த துணை நிறுவனத்தையும் அரசு நிறுவனத்தின் கீழ் நிறுவ முடியாது என்று நான் அறிவுறுத்தியுள்ளேன். ஏனெனில் இது போன்ற ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் பெரும் இழப்புகளைப் பதிவு செய்துள்ளன என்றார் அவர்.