கோலாலம்பூர், பிப். 12- காஸவின் சமீபத்திய நிலைமை குறித்து விவாதிப்பதற்காக கட்டார் பிரதமர் ஷேக் முகமது அப்துல்ரஹ்மான் அல்-தானி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிமை நேற்றிரவு தொலைபேசி வழி அழைத்தார்.
கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அமைதி முன்னெடுப்புகளை தாமதப்படுத்த இஸ்ரேலின் ஸியோனிச அரசாங்கம் வேண்டுமென்றே மேற்கொள்ளும் போர்நிறுத்த விதிமீறல் தொடர்பான காஸாவின் சமீபத்திய நிலைமை குறித்து தாங்கள் விவாதித்ததாக அன்வார் முகநூல் பதிவில் பதிவில் கூறினார்.
காஸா மக்களுக்கு எதிரான ஸியோனிச அரசின் அட்டூழியங்களை உடனடியாக நிறுத்தி நீடித்த அமைதியை அடைவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதில் மாண்புமிகு ஷேக் முகமது மேற்கொண்ட அயராத முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்.
காஸா மீதான இஸ்ரேலின் காலனித்துவம் மற்றும் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதோடு மனிதாபிமான உதவிகளை வழங்குவது உட்பட ஒவ்வொரு முயற்சியையும் ஆதரிப்பதில் மலேசியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நான் வலியுறுத்துகிறேன் என்று அவர் அப்பதிவில் கூறினார்.
மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டிருந்த துருக்கிய அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகனுடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அன்வார், பாலஸ்தீனத்தை மலேசியா தொடர்ந்து ஆதரிக்கும் என்று வலியுறுத்தினார்,
ஆனால் அந்த மோதலுக்கான உண்மையான காரணங்களை நிவர்த்தி செய்யத் தவறிய ஒப்பனையான அரசதந்திர நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் எச்சரிக்கை விடுத்தார்.