ஷா ஆலம், பிப். 12- வரும் நோன்புப் பெருநாள் காலத்தில் காலத்தில் டிக்கெட் விலை அல்லது விரைவுப் பேருந்து கட்டணத்தில் ஏற்படும் எந்தவொரு உயர்வையும் தரைப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (அபாட்) மூலம் அரசாங்கம் கண்காணிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில் 10 விழுக்காடு கூடுதல் கட்டணம் விதிக்க விரைவு பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மிக அதிகமான மற்றும் நியாயமற்ற முறையில் இருக்கும் எந்தவொரு கட்டண உயர்வுகளுக்கு எதிராகவும் அபாட் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.
பெருநாள் காலத்தில் விரைவு பேருந்துகள் 10 விழுக்காடு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுகின்றன. இது வழக்கமானது என்பதோடு பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், நியாயமற்ற அல்லது மிக அதிகமான விலை உயர்வை அபாட் கண்காணிக்கும். அத்தகைய நிறுவனங்களுக்கு எதிராக நாங்கள் (போக்குவரத்து அமைச்சு) அபாட் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
நோன்புப் பெருநாள் காலத்தில் அமல்படுத்தப்படும் விரைவு பேருந்து கட்டண உயர்வு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
கூடுதல் பேருந்து சேவை திறன் மற்றும் பேருந்து வாடகைக்கான கட்டணம் உள்ளிட்ட பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு பண்டிகைக் காலத்தில் விரைவுப் பேருந்து கட்டணத்தை 10 விழுக்காடு அதிகரிக்க அனுமதிக்கப்படுவதாக கடந்தாண்டு மார்ச் 22ஆம் தேதி லோக் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பத்து விழுக்காடு கூடுதல் கட்டண உயர்வு புதிய விஷயம் அல்ல என்றும் கடந்த 20 ஆண்டுகளாக இது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பும் ஒரு வாரத்திற்குப் பிறகும் இந்த கட்டண உயர்வு அனுமதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.