NATIONAL

சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடக் கட்டுமானத் திட்டம் நிறைவு பெற்றது

சுங்கை சிப்புட், பிப் 14 – சுங்கை சிப்புட், பேராக்கில் உள்ள சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடக் கட்டுமானத் திட்டம் நிறைவடைந்து.

63 லட்சம் ரிங்கிட் செலவில் நிர்மானிக்கப்பட்ட இந்தப் பள்ளியில் பயில்வதற்கு மாணவர்கள் தயாராக இருப்பதாக அப்பள்ளியின் நிர்வாக வாரியக் குழு தெரிவித்துள்ளது.

சுங்கை ரேலா பகுதியில் இந்திய மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சியில் 10 ஆண்டு கால சவால்களுக்குப் பிறகு, இந்த வெற்றி ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக அப்பள்ளியின் நிர்வாக வாரியக் குழுத் தலைவர் முனைவர் எஸ். சண்முகவேலு தெரிவித்தார்.

சுங்கை ரேலா தோட்டத்தில் உள்ள இப்பள்ளிக்கு, மாற்றுப் பள்ளியை எழுப்ப 2.8 ஏக்கர் நிலத்தை சுங்கை குருடா தோட்டத்தில் தேசிய நில நிதிக கூட்டுறவுச் சங்கம் வழங்கியதாக அவர் கூறினார்.

“2014ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி, 2016ஆம் ஆண்டு சில சிக்கல்களால் வேலைப்பாடுகள் நிறுத்தப்பட்ட பின்னர், வாரிய குழுவின் முயற்சியில் கல்வி அமைச்சு மற்றும் பலரின் உதவியோடு, குறிப்பாக தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் ஆதரவோடு நிறைவுப் பெற்றிருக்கின்றது,” என்று மேலாளர் வாரியக் குழுத் தலைவர் முனைவர் எஸ். சண்முகவேலு

இதனிடையே, இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றுவதை உறுதி செய்வதில் பள்ளியின் வாரியக் குழு, பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் அனைத்து தரப்பினரின் கடின உழைப்பு பலனளித்துள்ளதாக தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாகி டத்தோ பி. சகாதேவன் தெரிவித்தார்.

“இந்தக் கட்டிடம் 10 ஆண்டுகளாக அப்படியே இருந்தது. இறுதியில் குத்தகையாளருக்கு உதவி செய்தோம். வாரிய குழுவிற்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், பல சவால்களைக் கடந்து அவர்களின் முயற்சி வெற்றிப் பெற்றது,” என்றார் அவர்.

அதேவேளையில், இப்புதியக் கட்டிடம் சிறந்த மாணவர்களை உருவாக்க பெரும் பங்களிக்கும் என்று பள்ளியின் தலைமையாசிரியர் சுமதி முனியாண்டி நம்பிக்கைத் தெரிவித்தார்.

“இந்தப் புதிய கட்டிடமானது பல வகையில் பள்ளியின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக உள்ளது. மாணவர்களுக்காக அறிவியல் அறை உட்பட சிறப்பு அறைகள் அதிகமாக கட்டப்பட்டுள்ளன. இவை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை,” என்றார் அவர்.

அது மட்டுமின்றி, இந்த மாற்றம் தோட்டத்தில் உள்ள 150 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

இப்பள்ளியில் 32 மாணவர்கள் பயின்று வரும் வேளையில் தலைமையாசிரியருடன் 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் .

இப்புதியக் கட்டிடத்தில், சிறப்பு அறைகள், கணினி அறை, அறிவியல் அறை, தொழில் நுட்ப வடிவமைப்பு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.


Pengarang :