கோலாலம்பூர், மார்ச் 17- வரும் மே மாதம் 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கெ அடிலான் கட்சி தேர்தலில் தாம் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாக கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவித்துள்ளார்.
தலைவர்கள் சிலருடனும் கட்சி சகாக்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை தாம் எடுத்ததாக தகவல் தொடர்பு அமைச்சரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
லெம்பா பந்தாய் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாநிலங்களுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது அடிமட்ட தொண்டர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் மதிபீட்டின் அடிப்படையில் கட்சிக்கு அர்ப்பணிப்பதற்கு இன்னும் வாய்ப்புள்ளதை தாம் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
நேரம் வரும்போது நான் எனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வேன் என்று நேற்று பந்தாய் டாலாம் ரமலான் சந்தைக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
கெ அடிலான் கட்சியில் நடைபெறும் தேர்தல் குடும்பத்தில் நடக்கும் போட்டி போன்றது. ஆரோக்கியமான முறையிலும் தவறான அம்சங்களுக்கு இடம் தராத வகையிலும் போட்டியிட நாங்கள் முயற்சி செய்வோம். இதுவே பிரதமரின் (டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்) அறிவுரையாகும் என்றார் அவர்.
கெஅடிலான் கட்சியின் நடப்பு உதவித் தலைவர்கள் நால்வரும் தங்கள் பதவிகளைத் தற்காத்துக் கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஐந்தாவது நபராக ஃபாஹ்மி அப்பதவிக்கு போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது மற்றும் நுருள் இசா அன்வார் ஆகியோரே அந்த நான்கு உதவித் தலைவர்களாவர்.