ஜோகூர் பாரு, மார்ச் 17- இங்குள்ள பேரங்காடி ஒன்றின் பல்பொருள் விற்பனை மையத்தில் நோன்பு மாதத்தின் போது உணவருந்திய முஸ்லிம் அல்லாதவரை நபர் ஒருவர் திட்டி அறைந்த சம்பவத்திற்கு ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சினமூட்டும் வகையிலான இந்நடவடிக்கை பன்முகக் கலாசாரத்தைக் கொண்ட மலேசியாவில் நிலவும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வுக்கு எதிரானது என அவர் சொன்னார்.
ருக்குன் நெகாரா கோட்பாட்டைக் கடைபிடிக்கும் நாட்டில் இத்தகைய செயல்களுக்கு ஒருபோதும் இடமில்லை என்று அவர் சொன்னார்.
இன ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வன்முறை, பாகுபாடு, வேற்றுமையை எந்த ரூபத்திலும் வெளிப்படுத்தும் முயற்சிகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மலேசியர்கள் ஒருவரோடு ஒருவர் நாகரீகமான முறையில் அளவளாவும் அதே வேளையில் மற்றவர்களின் கலாசார நடைமுறைகளை மதித்து நடக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன். என்று எக்ஸ் தளப் பதிவொன்று தொடர்பில் கருத்துரைக்கும் விதமாக அவர் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் எலிஜா எனக் கூறிய அவர், இந்த சம்பவம் தொடர்பில் தம்போய் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக நான் அறிகிறேன். அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பை நல்கும் அதேவேளையில் விரிவாக விசாரிக்கும் பொறுப்பை காவல் துறையிடம் ஒப்படைத்து விடுவர் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.
உணவு உட்கொண்டதற்காக அந்த ஆடவர் தன்னைத் திட்டிய போது தாம் முஸ்லீம் அல்ல என்று அவரிடம் தாம் விளக்கியதாக பாதிக்கப்பட்ட நபரான எலிஜா தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அந்த ஆடவரிடம் அடையாளக் கார்டைக் காட்டும்படி கேட்ட அந்த நபர் பின்னர் அவரை அறைந்துள்ளார். அந்த நபரின் மகன் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியதோடு தன் தந்தையின் சார்பாக அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.