MEDIA STATEMENT

இஸ்ரேல் வான் தாக்குதலில் எட்டு ‘மாப்பிம்‘ மனிதாபிமான பணியாளர்கள் பலி

ஷா ஆலம். மார்ச் 17- வட காஸாவின் பெய்ட் லாஹியா பகுதியில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான் தாக்குதலில் மாப்பிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய ஆலோசக மன்றத்தின் மனிதாபிமானப் பணியாளர்கள் எண்மர் உயிரிழந்தனர்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் அக்குழுவினர் அகதிகளின் குடும்பத்தினருக்காக தற்காலிக கூடாங்களை அமைத்துக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக  மாப்பிம் இயக்கவாதியான டத்தோ சானி அராபி கூறினார்.

முகமது அல்-சராஜ்,  பிலால் குஸாம் ஒகிலா, முகமது சமிர் ஓசாலிம், முகமது காலிட் ஓசாலிம், முகமது அல்-காபீர், ஹூசேம் கரிப், பிலால் அபு மாத்தார் மற்றும் அகமது அமாட் ஆகியோரை உயிரிழந்த அந்த எண்மராவர் என்று அவர் சொன்னார்.

மனிதாபிமானப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்பதோடு மோசமான போர்க் குற்றமும் ஆகும் என அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் அப்பாவிகளின் உயிர் பறிபோனதோடு காஸாவில் மனிதாபிமான பணிகளையும் பாதித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் உள்பட எட்டு களப்பணியாளர்கள் கொல்லப்பட்டது குறித்து மாப்பிம் அமைப்பும் அதன் வியூக பங்காளியான அல்-காஹிர் அறக்கட்டறையும் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளன என்று அவர் சொன்னார்.

இந்த வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்துலகச் சமூகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இது காஸா மீதான தாக்குதல் மட்டும் அல்ல. மாறாக அனைத்துலக சமூகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும் என அவர் வர்ணித்தார்.

அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதை அனைத்துலகச் சமூகம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க கூடாது என்றும் அவர் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :