மலாக்கா, மார்ச் 17- கோத்தா ஷாபண்டாரில் நேற்று அதிகாலை சாலை சமிக்ஞை விளக்கில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரின் தலையில் குத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
25 வயதான சந்தேக நபர் கோத்தா ஷாபண்டாரில் பிற்பகல் 3.00 மணிக்கு கைது செய்யப்பட்டு உடல்நலக் காரணங்களால் விடுவிக்கப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.
வாக்குமூலம் பெறவும் விசாரணைக்கு உதவவும் சந்தேக நபர் குற்றவியல் சட்டத்தின் 506 மற்றும் 323வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் சந்தேக நபர் திடீரென தான் ஓட்டிச் சென்ற கருப்பு நிற டோயோட்டா வெல்ஃபயர் வாகனத்திலிருந்து இருந்து இறங்கி சாலை சமிக்ஞை விளக்கில் நின்று கொண்டிருந்த பாதிக்கப்பட்டவரின் தலையின் பின்புறத்தில் குத்தியதாக நம்பப்படுகிறது என்று கிறிஸ்டோபர் கூறினார்.
இச்சம்பவம் நிகழ்ந்த போது பாதிக்கப்பட்ட நபர் போக்குவரத்து சமிக்ஞை விளக்கில் காத்திருந்தார். சந்தேக நபரின் இத்தாக்குதலின் விளைவாக பாதிக்கப்பட்டவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி அந்த அடையாளம் தெரியாத நபரை தள்ளிவிட்டார்.
சம்பவத்தைப் பார்த்ததும் அந்த இடத்திலிருந்த சக வாகனமோட்டிகள் பாதிக்கப்பட்டவருக்கு உதவ வந்தனர். பின்னர் சந்தேக நபர் தனது வாகனத்தில் ஏறிச் சென்றார் என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேக நபர் குடிபோதையில் இருந்ததாக நம்பப்படுவதாகவும் சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் கிறிஸ்டோபர் தெரிவித்தார்.