NATIONAL

தோட்டங்கள்,  காடுகளில்  தீ ஏற்பட்டதற்கு போதைப் பித்தர்கள் காரணமா? போலீஸ் மறுப்பு

குவாந்தான், மார்ச் 20 –   இங்குள்ள கம்போங் செண்டரவாசி அருகே 113 ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள்  மற்றும் அன்னாசித் தோட்டத்தில் மார்ச் 7 முதல் பரவிவரும்    தீச்சம்பவத்திற்கு போதைப் பித்தர்கள்  காட்டை மறைவிடமாகப் பயன்படுத்தியதே காரணம்  எனக் கூறப்படுவதை காவல்துறை மறுத்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.

இருப்பினும், தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட  திறந்தவெளி தீயிடல்  சம்பவங்களால்   இப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதை  தொடக்கக்கட்ட விராணைகள்  தெரிவிக்கின்றன.

எங்கள் சோதனைகளின் அடிப்படையில், அந்தப் பகுதியில் போதைப்பித்தர்கள் புகலிடம்  எதுவும் இல்லை. இது ஒரு திறந்தவெளி. போதைக்கு அடிமையானவர்கள் தங்கள் மறைவிடங்களுக்கு தீ வைப்பது சாத்தியமில்லை என அவர்  சொன்னார்.

இச்சம்பவத்திற்கான சரியான காரணத்தை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதன் தொடர்பில்  விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது  என்று நேற்று மாலை இங்கு  ரமலான் சந்தையைப் பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தற்போதைய வெப்பமான மற்றும் வறண்ட காலங்களில்  எளிதில்  பரவக்கூடிய தீயைக் கட்டுபடுத்துவது கடினமாக இருக்கும் என்பதால் தீப்பிடிக்கக்கூடிய பகுதிகளில் திறந்தவெளி தீயிடல் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு யஹாயா பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று நம்பப்படும் நபர்கள் புகலிடமாக இருக்கும் காட்டுப் பகுதியில் தீ ஏற்பட்டதாக சிலர் அண்மையில்  கூறியிருந்தனர்.


Pengarang :