புத்ராஜெயா, மார்ச் 20 – தென் சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) காவல்துறை
(யு.என்.போல்) பணிப் படையில் தற்போது பணியாற்றி வரும் 18 அரச மலேசிய காவல்துறை அதிகாரிகளும் 55 மலேசிய பிரஜைகளும பாதுகாப்பாக இருப்பதாக கென்யாவின் நைரோபியில் உள்ள மலேசிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்நாட்டில் தற்போது பணியாற்றும் காவல் துறையினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக மலேசியத் தூதரகம் யு.என்.போல் அமைப்புடன் தொடர்பு கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தென் சூடானில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டிலுள்ள அனைத்து மலேசிய குடிமக்களும் விழிப்புடன் இருக்கும் அதேவேளையில் தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும்படியும் அமைச்சு கேட்டுக் கொண்டது.
தங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக உணர்ந்தால், அவர்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்வது அல்லது தானாக முன்வந்து மலேசியாவுக்குத் திரும்புவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்று விஸ்மா புத்ரா என்று அழைக்கப்படும் அமைச்சு குறிப்பிட்டது.
நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக மலேசியர்கள் நாட்டிற்கான பயணத்தை இப்போதைக்கு ஒத்திவைக்குமாறு விஸ்மா புத்ரா அறிவுறுத்தியது.
தென் சூடானில் உள்ள அனைத்து மலேசிய குடிமக்களும், சமீபத்திய தகவல்களையும் பொருத்தமான உதவியையும் பெறுவதை உறுதிசெய்ய, கென்யாவின் நைரோபியில் உள்ள மலேசிய தங்கள் இருப்பைப் பதிவு தூதரகத்தில் தங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு, 611, ருண்டா குரோவ், ருண்டா, அஞ்சல் பெட்டி 42286-00100, நைரோபி; என்ற முகவரியில் அல்லது +254 111 052710 (அலுவலகம்) / +254 741 603952 / +254 704 770367
(கைப்பேசி) என்ற தொலைபேசி எண்களில் அல்லது [email protected] என்ற
மின்னஞ்சல் முகவரி வழியாக மலேசியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.